வால்பாறையில் ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் - ரேஷன் கடையை சேதப்படுத்தின
வால்பாறையில் ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. மேலும் ரேஷன் கடையையும் சேதப்படுத்தின.
வால்பாறை,
வால்பாறைக்கு உள்பட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகஅளவில் இருந்து வருகிறது. குறிப்பாக தாய்முடி, பன்னிமேடு, வாகமலை, சங்கிலிரோடு, தோனிமுடி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.
இந்த காட்டு யானைகள் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளையும் தோட்ட அலுவலகங்களையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிஅளவில் தாய்முடி எஸ்டேட் தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் குடியிருந்து வரும் பகுதிக்குள் 3 காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் அந்த யானைகள் குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்தின. மேலும் யானைகள் அந்தப்பகுதியில் உள்ள ரேஷன் கடையின் சுவரையும் உடைத்து உள்ளே புகுந்தது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து பொருட்கள் அனைத்தையும் காட்டு யானைகள் சேதப்படுத்தின. யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு வெளியே வந்த ஊர் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள், அந்த யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு முன்னால், தீ மூட்டியதோடு தகர டப்பாக்கள் மூலம் ஒலி எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் இதுபற்றி மானாம்பள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பட்டாசுகள் வெடித்து அந்த 3 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டினார்கள்.
Related Tags :
Next Story