விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் மறியல் போராட்டம் - 920 பேர் கைது
விழுப்புரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் 920 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் விழுப்புரம் மண்டலம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு மண்டல செயலாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜெயசங்கர், மாநில துணை பொதுச்செயலாளர் பழனிவேல், மாநில செயலாளர் காங்கேயன், துணைத்தலைவர் அம்பிகாபதி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாவட்ட தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முத்தரப்பு ஒப்பந்தப்படி ரூ.380-ஐ தினக்கூலியாக வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பல லட்சம் ரூபாய் கூலி பாக்கி தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் சேகர், பாலாஜி, தேசிங்கு, சீனிவாசன், விஜயகுமார், அருள், வெங்கடேசன் உள்பட விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராபின்சன், கனகேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 920 பேரை கைது செய்து, ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story