கடலூரில் உலக மன நல விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்
உலக மன நல தினத்தை யொட்டி கடலூரில் நடந்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அன்புசெல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடலூர்,
உலக சுகாதார மையத்தின் பரிந்துரைப்படி அக்டோபர் மாதம் 10-ந்தேதி உலக மன நல தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி நேற்று கடலூர் மாவட்ட மன நல திட்டம் சார்பில் உலக மன நல தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி விழிப்புணர்வு பேரணி கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கியது.
பேரணியை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பேரணியில் அரசு, தனியார் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பாரதிசாலை, நெல்லிக்குப்பம் சாலை வழியாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையை சென்றடைந்தனர்.
முன்னதாக அவர்கள் மனநோய் முற்றிலும் குணமாகக்கூடியது. இந்த நோய்க்கு மருந்து உண்டு போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமுதாய விழிப்புணர்வு மற்றும் கல்வி மூலம் மனநோய் பற்றிய தவறான எண்ணங்களை மாற்றி, மனநோய் மீது உள்ள மூட நம்பிக்கைகள் மற்றும் எண்ணங்களை அகற்றுவதற்காக இந்த பேரணி நடத்தப்பட்டதாக டாக்டர் கள் தெரிவித்தனர்.
இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சீனுவாசன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் சாய்லீலா, நிலைய மருத்துவ அலுவலர் குமார், மாவட்ட மன நல திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி, மன நல டாக்டர்கள் கலையரசி, அஸ்வின்ராஜ், ஹபீசா, இந்திய மருத்துவ கழக செயலாளர் கேசவன், முதன்மை கண் டாக்டர் அசோக்பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story