தஞ்சை அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள், கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு


தஞ்சை அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள், கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 11 Oct 2019 4:45 AM IST (Updated: 11 Oct 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 ஐம்பொன் சிலைகளும் நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

கும்பகோணம்,

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழன் 35 ஆண்டுகள் மன்னராக ஆட்சி புரிந்தார். அவருடைய ஆட்சி காலத்தில் ஏராளமான ஐம்பொன் சிலைகள், ஆபரணங்கள் பெரியகோவிலுக்கு வழங்கப்பட்டன. இவற்றில் பல சிலைகளை காணவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் இருந்த தஞ்சை அழகர், திரிபுராந்தகர் ஆகிய சிலைகளை காணவில்லை என தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணை சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், ஏ.டி.எஸ்.பி. ராஜாராம் ஆகியோரை கொண்ட குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் பெரியகோவிலில் இருந்து மாயமான 2 சிலைகளும் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

நீதிபதி உத்தரவு

தகவலின்பேரில் கடந்த 5-ந் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அருங்காட்சியகத்தில் இருந்து 2 சிலைகளையும் மீட்டு, திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர். மிகவும் பழமையான இந்த ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த 2 சிலைகளையும் நேற்று கும்பகோணம் கோர்ட்டுக்கு எடுத்து வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தலைமை குற்றவியல் நீதிபதி மாதவராமானுஜம் முன்பு கோர்ட்டில் ஒப்படைத்தனர். இதையடுத்து 2 சிலைகளையும் கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் 2 சிலைகளும் பலத்த பாதுகாப்புடன் நாகேஸ்வரன் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டன.

Next Story