பூண்டி ஏரிக்கரையை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்


பூண்டி ஏரிக்கரையை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 10 Oct 2019 10:45 PM GMT (Updated: 10 Oct 2019 7:05 PM GMT)

பூண்டி ஏரிக்கரையை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கோடை வெயில் காரணமாக 3 மாதங்களுக்கு முன் ஏரி வறண்டது.

இதனை கருத்தில் கொண்டு பூண்டியை அடுத்துள்ள மோவூரில் இருந்து காந்திநகர் வரை ஏரிக்கரை பலப்படுத்தும் பணிகளை அரசு தொடங்கியது. இந்த நிலையில் கடந்த மாதம் பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மேலும் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் கரையை பலப்படுத்தும் பணிகளில் தோய்வு ஏற்பட்டது.

தற்போது மழை இல்லாததை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கரையை பலப்படுத்தும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. வெள்ளை நிற பெரிய பாறாங்கற்களை கொண்டு கரையை பலப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது. இருப்பினும் கரையை பலப்படுத்தும் பணிகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story