வங்கிகளில் முறைகேடுகளை தடுக்க சட்டம் இயற்றப்படும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்


வங்கிகளில் முறைகேடுகளை தடுக்க சட்டம் இயற்றப்படும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
x
தினத்தந்தி 11 Oct 2019 4:00 AM IST (Updated: 11 Oct 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்களை சந்தித்த மத்திய நிதி மந்திாி நிர்மலா சீதாராமன் வங்கிகளில் முறைகேடுகளை தடுக்க சட்டம் இயற்றப்படும் என கூறினார்.

மும்பை,

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பஞ்சாப் மற்றும் மகராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி.) ரூ.4 ஆயிரத்து 355 கோடி முறைகேடு புகாரை தொடர்ந்து, அந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி முடக்கியது. வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து 6 மாதத்திற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது என கட்டுப்பாடு விதித்தது.

இதனால் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் திகைத்து போனார்கள். கொதிப்படைந்த அவர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, ரிசர்வ் வங்கி அந்த தொகையை ரூ.10 ஆயிரமாகவும், அதன்பின்னர் ரூ.25 ஆயிரமாகவும் அதிகரித்தது.

பி.எம்.சி. வங்கி செயல்பாடுகள் முடக்கப்பட்டு உள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மும்பை நரிமன்பாயிண்டில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு வந்தார். இதுபற்றி அறிந்ததும் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்தநிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கு திரண்டிருந்த பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக நிதி சேவைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர்கள் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரை சந்தித்து பேச உள்ளனர்.

அப்போது, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பார்கள்.

வங்கிகளில் முறைகேடுகளை தடுக்க நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வரும். தற்போது நீங்கள் சந்தித்து வரும் பிரச்சினை தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தாதாசிடம் பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில், மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாட்டில் பொருளாதார மந்தநிலையை சரி செய்ய அரசு துறை சார்ந்த தீர்வுகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Next Story