முதல்-மந்திரியின் சொந்த ஊரான ‘நாக்பூர்’ மராட்டியத்தின் குற்ற நகரம் சரத்பவார் தாக்கு


முதல்-மந்திரியின் சொந்த ஊரான ‘நாக்பூர்’ மராட்டியத்தின் குற்ற நகரம் சரத்பவார் தாக்கு
x
தினத்தந்தி 10 Oct 2019 11:15 PM GMT (Updated: 10 Oct 2019 7:45 PM GMT)

மராட்டிய சட்டசபை தேர்தலை, பா.ஜனதா-சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாகவும் சந்திக்கின்றன.

மும்பை,

கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று வார்தா மாவட்டத்தில் உள்ள ஹிங்காங்காட்டில் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டம்- ஒழுங்கை உறுதி செய்வது, பொதுமக்களுக்கு நீதி வழங்குவது அரசின் பொறுப்பாகும்.

மராட்டியத்தின் 2-வது தலைநகரம் நாக்பூர். தற்போது நாக்பூர் நாட்டின் குற்ற நகரமாக அறியப்பட்டு வருகிறது.

மாநிலத்தின் முதல்-மந்திரி நாக்பூரை சேர்ந்தவர் தான். இந்த மாநிலம் இதுபோன்ற அவமானத்தை ஒருபோதும் எதிர்கொள்ளவில்லை. மாநிலத்தின் கடன் ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்து உள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி பயன் 30 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் ஏற்பட்டு வரும் வேலையிழப்பு குறித்து பட்னாவிசின் அரசு கவலைப்படவில்லை.

மாநில கூட்டுறவு வங்கி முறைகேடு தொடர்பாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும், அமலாக்கத்துறையை அணுக முடிவு செய்திருந்தேன். நான் விசாரணைக்கு வருவேன் என்று சொன்னதும் அவர்கள் பயந்து விட்டார்கள். விசாரணைக்கு போகக் கூடாது என டெல்லியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. போலீஸ் அதிகாரிகளும் விசாரணைக்கு வர வேண்டாம் என என்னை கைக்கூப்பி கேட்டுக்கொண்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story