உலக சிலம்ப போட்டியில் 11 தங்கம் உள்பட 24 பதக்கங்கள் வென்று சாதனை வீரர்-வீராங்கனைகளுக்கு கலெக்டர் பாராட்டு


உலக சிலம்ப போட்டியில் 11 தங்கம் உள்பட 24 பதக்கங்கள் வென்று சாதனை வீரர்-வீராங்கனைகளுக்கு கலெக்டர் பாராட்டு
x
தினத்தந்தி 10 Oct 2019 11:00 PM GMT (Updated: 10 Oct 2019 8:11 PM GMT)

மலேசியாவில் நடந்த உலக சிலம்ப போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 11 தங்கம் உள்பட 24 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். அவர்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பாராட்டினார்.

நாகர்கோவில்,

உலக சிலம்பம் சம்மேளனம் சார்பில் உலக சிலம்ப போட்டி மலேசியாவில் உள்ள கடா மாநிலத்தில் நடந்தது. போட்டியானது சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவுகளில் நடத்தப்பட்டது.

இதில் நெடுங்கம்பு, நடுகம்பு, இரட்டை கம்பு, ஒற்றை வாள், இரட்டைவாள், ஒற்றை சுருள்வாள், இரட்டை சுருள்வாள், மடுவு, கம்புஜோடி, குழு ஆயுத ஜோடி, கம்பு சண்டை ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் ஒரு வீரர் 3 போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

குமரி வீரர், வீராங்கனைகள்

இந்தியா, மலேசியா, வங்காளதேசம், கம்போடியா உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகள் போட்டிகளில் கலந்து கொண்டன. இந்தியாவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளும் இதில் பங்கேற்றனர். அவர்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 9 வீரர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

சீனியர் பிரிவில் நடத்தப்பட்ட போட்டியில், ராஜாக்கமங்கலம் காஞ்சிரவிளையை சேர்ந்த பவித்ரா 3 தங்கப்பதக்கம் வென்று உலக சாதனை படைத்தார். தெக்குறிச்சியை சேர்ந்த சந்தோஷ் 2 தங்கம், 1 வெண்கலமும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வர் 1 தங்கம், 1 வெண்கலமும், பாம்பன்விளையை சேர்ந்த அஸ்வின் 2 தங்கம் மற்றும் 1 வெண்கலம், அப்சரா 1 தங்கம் மற்றும் 1 வெள்ளி 1 வெண்கலம், அஜய் விஷ்வா 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம், ஆசிக் 1 தங்கப்பதக்கமும் பெற்றனர்.

11 தங்கம் உள்பட 24 பதக்கங்கள்

சப்-ஜூனியர் பிரிவில் அமிர்தா வர்ஷிகா 1 வெள்ளியும், 2 வெண்கலமும், மேலச்சங்கரன்குழியை சேர்ந்த திவ்யா 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கமும் என மொத்தம் 11 தங்கம், 5 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் ஆகிய 24 பதக்கங்களை வென்று மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

இவர்களுக்கு பயிற்சியாளர்கள் குமார், ஜெயகுமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

கலெக்டர் பாராட்டு

போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்தனர். அவர்களை கலெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.


Next Story