மோடி-சீன அதிபர் வருகையையொட்டி பாலவாக்கத்தில் பா.ஜனதா படகு பேரணி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்


மோடி-சீன அதிபர் வருகையையொட்டி பாலவாக்கத்தில் பா.ஜனதா படகு பேரணி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Oct 2019 4:00 AM IST (Updated: 11 Oct 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

மோடி, சீன அதிபர் வருகையையொட்டி பாலவாக்கத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் நடந்த படகு பேரணியை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆலந்தூர்,

பிரதமர் நரேந்திரமோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதற்காக இன்று(வெள்ளிக்கிழமை) சென்னை வரும் இருவரையும் வரவேற்கும் விதமாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில மீனவர் அணி சார்பில் சென்னை பாலவாக்கம் பல்கலைநகர் கடற்கரையில் இருந்து கடல் பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை தேசிய ஒற்றுமை கடல்வழி படகு பேரணி நடைபெற்றது.

மாநில மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடந்த படகு பேரணியை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மீனவர் அணி நிர்வாகிகளுடன் பொன்.ராதா கிருஷ்ணனும் படகு பேரணியில் பங்கேற்றார்.

பாலவாக்கம் கடற்கரையில் தொடங்கிய பேரணியில் சுமார் 90 படகுகளில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சென்றனர்.

பின்னர் நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

முன்னோர்களுக்கு மரியாதை

இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் இருவரும் மாமல்லபுரம் வர உள்ளனர். இந்தியா-சீனா உறவு, குறிப்பாக தமிழகத்துக்கும், சீனாவிற்கும் உள்ள உறவை புதுப்பிக்கும் வகையில் பல்லவர்களால் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதி மக்கள், சீனாவிற்கு சென்று உள்ளனர். கடல் மார்க்கமாக சென்று வணிக, கலாசார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்தி உள்ளனர்.

மாமல்லபுரம் வரும் இரு தலைவர்களையும் வரவேற்கும் விதமாகவும், கடல் கடந்து சீனா சென்று தொடர்பு வைத்திருந்த நம் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் வீதமாகவும் இந்த படகு பேரணி நடத்தப்பட்டது. 90 படகுகள் கடலுக்குள் சென்று வணக்கம் செலுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story