கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அழுகிய காய்கறிகளை ஏற்றி வந்த வாகனத்தை சிறை பிடித்த வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அழுகிய காய்கறிகளை ஏற்றி வந்த தனியார் ஆன்லைன் நிறுவனத்தின் வாகனத்தை சிறைபிடித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் என அனைத்துக்கும் தனித்தனியாக கடைகள் இயங்கி வருகிறது. தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்துசெல்லும் கோயம்பேடு மார்க்கெட்டில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் தினமும் கொண்டுவந்து விற்கப்படுகிறது.
இந்தநிலையில் தனியார் ஆன்லைன் நிறுவனம் மூலம் சேகரிக்கப்படும் காய்கறிகள் கிடங்கில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், அதில் அழுகிய காய்கறிகளை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில கடைகளுக்கு சட்டவிரோதமாக வினியோகம் செய்து வருவதாகவும் வந்த தகவலின்பேரில் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
வாகனத்தை சிறை பிடித்தனர்
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து அழுகிய காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்த வாகனத்தை, கோயம்பேடு கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர், ரவி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கோயம்பேடு மார்க்கெட் முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் மற்றும் கோயம்பேடு போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் அழுகிய காய்கறிகளை ஏற்றி வந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த காய்கறிகள் தரமானதா? என்பதை பரிசோதனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சண்முகசுந்தரத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் 7 மூட்டைகளில் அழுகிய நிலையில் காய்கறிகள் இருப்பது தெரியவந்தது. அந்த காய்கறிகள் அப்புறப்படுத்தப்பட்டதாக சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கூறியதாவது:-
குறைந்த விலைக்கு விற்பனை
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினந்தோறும் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் விளைச்சலாகும் காய்கறிகள், பழங்கள் நேரடியாக விற்பனைக்கு வருகிறது. அதனை நாங்கள் அன்றைய தினமே விற்பனை செய்து விடுகிறோம். ஆனால் தனியார் நிறுவனம் ஒன்று ஆன்லைன் மூலம் இந்த காய்கறிகளை மொத்தமாக வாங்கி அதனை கிடங்கில் தேக்கி வைத்து அங்கிருந்து ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் விற்பனை போக மீதமுள்ள தரமற்ற காய்கறிகளை குறைந்த விலைக்கு இங்குள்ள சில கடைகளுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.
வியாபாரிகள் கோரிக்கை
மேலும் எங்களுக்கு எங்கிருந்து காய்கறிகள் வருகிறது என்பதை கண்டறிந்து, அந்த விவசாயிகளிடம் அந்த தனியார் நிறுவனம் நாங்களே நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுக்கு நேரடியாக காய்கறி வினியோகம் செய்வதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளது.
இந்த நிலை நீடித்தால் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே இதனை தடுக்க வேண்டும்.
இவ்வாறு வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.
அதைகேட்ட அதிகாரிகள், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story