வேளாண் எந்திரங்களுக்கான வாடகை மையங்கள் அமைக்க விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் - கலெக்டர் தகவல்


வேளாண் எந்திரங்களுக்கான வாடகை மையங்கள் அமைக்க விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2019 10:30 PM GMT (Updated: 10 Oct 2019 8:46 PM GMT)

வேளாண் எந்திரங்களுக்கான வாடகை மையங்கள் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு 40 சதவீத அரசு மானியம் வழங்கப்படுகின்றது என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம், 

தமிழக அரசு விவசாயிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் அதிக விலையுள்ள நவீன வேளாண் எந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கும் திட்டத்திற்கு 40 சதவீத மானியம் வழங்கி விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் எந்திரங்களிலிருந்து தங்களது விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். அவ்வாறு தேர்வு செய்யப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் மொத்த தொகையினை சம்பந்தப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ள முகவர்களிடம் வரைவோலையாக செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்திய வரைவோலை நகலினை வேளாண்மை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அளித்தவுடன், மாவட்ட செயற்பொறியாளரால் வேளாண் எந்திரங்களுக்கான உரிய வழங்கல் ஆணை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வேளாண் வாடகை மையம் அமைத்திட 40 சதவீத மானியம் என்ற அடிப்படையில் ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

நடப்பு நிதி ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 6 வாடகை மையங்கள் அமைத்திட ரூ.60 லட்சம் மானிய தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விரும்புவோர் உடனடியாக ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி வருவாய் கோட்டங்களில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம். இந்த அவர் தெரிவித்துள்ளார்.

Next Story