சீன அதிபர் வருகையையொட்டி ராமேசுவரம் கடல் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு - பாம்பன் பாலத்திலும் துப்பாக்கியுடன் போலீசார் ரோந்து
சீன அதிபர் வருகையையொட்டி ராமேசுவரம் கடல் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பாம்பன் பாலத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேசுவரம்,
சீன அதிபர் ஜின்பிங் 2 நாள் பயணமாக இன்று(வெள்ளிக்கிழமை) சென்னை வருகின்றார். சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பானது சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
சீன அதிபர் தமிழகம் வருவதையொட்டி ராமேசுவரம் தீவை இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பாம்பன் ரெயில்வே பாலத்திலும் நேற்று முதல் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாம்பன் ரெயில்வே பாலத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசகாயசேகர் தலைமையில் போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.ரெயில்வே பணியாளர்களை தவிர சுற்றுலா பயணிகள் யாரும் ரெயில்வே பாலப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ராமேசுவரம் கோவிலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொண்டி முதல் மண்டபம் வரையிலான இந்திய கடல் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றும், மண்டபம் முதல் ராமேசுவரம் வரையிலான கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதை தவிர மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்திற்கு சொந்தமான உள்ள 2 கப்பலும், 3 ஹோவர் கிராப்ட் கப்பலும், மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
உச்சிப்புளி விமான தளத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
Related Tags :
Next Story