அதிக மதிப்பெண் போடுவதாகக் கூறி நர்சிங் மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி தாளாளர் கைது


அதிக மதிப்பெண் போடுவதாகக் கூறி நர்சிங் மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி தாளாளர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2019 10:30 PM GMT (Updated: 10 Oct 2019 8:46 PM GMT)

சிவகங்கையில் அதிக மதிப்பெண் போடுவதாகக் கூறி நர்சிங் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி தாளாளர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை,

சிவகங்கையைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும், சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. சில நாட்களிலேயே அந்தப் பெண்ணுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது அந்தப்பெண் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப்பெண்ணின் கணவர் உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அந்தப் பெண்ணிடம் விசாரித்ததில், அவர் சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்த போது அந்தக்கல்லூரியின் தாளாளர் சிவகுருதுரை ராஜ் அதிக மதிப்பெண் போடுவதாகக் கூறி அந்தப் பெண்ணை கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபா மற்றும் ரஞ்சித் ஆகியோர் விசாரணை நடத்தி தாளாளர் சிவகுரு துரைராஜை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவகுரு துரைராஜ் பா.ஜ.க. பிரமுகர் ஆவார்.

சம்பந்தப்பட்ட தனியார் நர்சிங் கல்லூரியில் இது போன்று வேறு மாணவிகள் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்றும், புகார்கள் ரகசியமாக வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story