கருணாநிதிக்கு இடம் கேட்ட தி.மு.க., மெரினாவில் காமராஜருக்கு இடம் கொடுக்க மறுத்தது ஏன்? - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி
மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்ட தி.மு.க., காமராஜருக்கு இடம் கொடுக்க மறுத்தது ஏன்? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார்.
களக்காடு,
இதுதொடர்பாக நாங்குநேரி தொகுதி களக்காடு அருகே உள்ள கருவேலங்குளத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். அவரது ஆட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத, மு.க.ஸ்டாலின் பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார். தி.மு.க. நிர்வாகிகள் தான் வெளிநாட்டில் தொழில்களை செய்து வருகின்றனர். சுவிஸ் வங்கியில் போடப்பட்ட பணம் குறித்து புள்ளி விவரம் கிடைத்த பிறகு காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகளின் வெட்ட வெளிச்சம் பொதுமக்களுக்கு தெரியவரும்.
அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு உள்ளூர் வங்கி கணக்கில் கூட பணம் இருக்காது. தி.மு.க. குடும்பம் தான் ஆசியாவில் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக உள்ளது. அந்த கட்சி அறக்கட்டளைக்கு மட்டும் பல கோடி சொத்துகள் உள்ளன. தி.மு.க.வின் குடும்ப சொத்து விவரங்களை மறைக்கவே, அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது மு.க.ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். முதல்-அமைச்சர் பதவி கிடைக்காததால் அவர் இவ்வாறு பேசி வருகிறார்.
காமராஜருக்கு இடம் கொடுக்க மறுத்தது ஏன்?
உள்ளாட்சி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு தி.மு.க.வினர் போட்ட வழக்குதான் காரணம் என்பதை மக்கள் அறிவார்கள். அதனால்தான் உள்ளாட்சி தேர்தலை இன்று வரை நடத்த முடியவில்லை. தி.மு.க. பல்வேறு பினாமி சங்கங்கள், இயக்கங்களை வைத்து கோர்ட்டில் பல்வேறு வழக்குகளை போட்டு தூண்டி விடுகிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக்கூடாது என்று தி.மு.க.வின் பினாமி சங்கங்கள் மூலம் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. தொடர்ந்து கருணாநிதி இறந்த பிறகு அதே மெரினாவில் இடம் கேட்டனர். அப்போது தி.மு.க. பினாமி சங்கங்கள் மூலம் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் இரவோடு, இரவாக வாபஸ் வாங்கினர். இது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்க முடியும். ஆனால் மனிதாபிமான முறையில் அதை செய்யவில்லை. அதை தி.மு.க.வினர் உணரவும் இல்லை.
பெருந்தலைவர் காமராஜர் ஒரு எளிமையான தலைவர், அனைவராலும் நேசிக்கக்கூடிய தலைவர். 9 ஆண்டு காலம் தமிழக முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் இறந்தபோது, காங்கிரஸ் கட்சியினர், அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வலியுறுத்தினர். அப்போது முன்னாள் முதல்-அமைச்சர்களுக்கு மெரினாவில் இடம் கொடுக்க முடியாது என்று கருணாநிதி கூறினார். ஆனால் முதல்-அமைச்சர் பதவியில் இல்லாதபோது கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கேட்ட தி.மு.க., காமராஜருக்கு இடம் கொடுக்க மறுத்தது ஏன்? மெரினாவில் காமராஜருக்கு இடம் ஒதுக்காத தி.மு.க.வை காங்கிரஸ் தொண்டர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.
நாங்குநேரி தொகுதியில் பச்சையாறு அணையை கொண்டு வந்தது அ.தி.மு.க.தான். ஆனால் கருணாநிதி கொண்டு வந்ததாக மு.க.ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார். முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு இந்த திட்டத்தை கொண்டு வந்தார்.
வலுவான பாரதம் வேண்டும் என்பதற்காக பாரதீய ஜனதாவை அ.தி.மு.க. ஆதரித்தது. தமிழக உரிமைக்காக அ.தி.மு.க. மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் குரல் எழுப்பி உள்ளது. நாங்கள் யாருக்கும் அடிமைகள் கிடையாது. பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர தி.மு.க. தள்ளாடி வருகிறது. தற்போது மத்திய பாரதீய ஜனதா அரசால் வழங்கப்பட்டுள்ள பதவிகளை தி.மு.க.வினர் வாங்கிக்கொண்டு அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு ரோஷம் இருந்தால் அந்த பதவிகளை உதறி தள்ளி இருக்க வேண்டாமா?
நடைபெறுகிற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story