விளாத்திகுளம் அருகே மீன்பிடித்தபோது பரிதாபம்: நடுக்கடலில் மின்னல் தாக்கி மீனவர் பலி
விளாத்திகுளம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்தபோது, மின்னல் தாக்கியதில் கடலில் தவறி விழுந்த மீனவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பாரை அடுத்த பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஸ்டாலின் (வயது 65). மீனவரான இவர் அப்பகுதியில் மீனவர் சங்க தலைவராக உள்ளார்.
இவர் நேற்று அதிகாலையில் தனது நாட்டுப்படகில் அப்பகுதியைச் சேர்ந்த தேவதிரவியம் மகன் மீனவரான ஜஸ்டினை (34) அழைத்து கொண்டு, கடலில் மீன்பிடிக்க சென்றார். இவர்கள் 2 பேரும் நடுக்கடலில் தூண்டில் போட்டு மீன்களை பிடித்து கொண்டிருந்தனர்.
காலை 7 மணி அளவில் கடலில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது நாட்டுப்படகின் அருகில் திடீரென்று மின்னல் தாக்கியது. இதனால் பலத்த காயமடைந்த ஜோசப் ஸ்டாலின், ஜஸ்டின் ஆகிய 2 பேரும் மயங்கி விழுந்தனர். அப்போது ஜஸ்டின் நிலைதடுமாறி கடலில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்போது அந்த வழியாக படகில் சென்ற மீனவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், ஜோசப் ஸ்டாலினை மீட்டு படகில் கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தருவைக்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து படகில் சென்று, கடலில் தவறி விழுந்து மாயமான ஜஸ்டினை தேடும் பணியில் ஈடுபட்டனர். மீனவர்களும் நாட்டுப்படகுகளில் கடலில் சென்று, ஜஸ்டினை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மாலையில் பெரியசாமிபுரம் கடற்கரையில் இறந்த ஜஸ்டினின் உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைப்பற்றி, பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்னல் தாக்கியதில் உயிரிழந்த ஜஸ்டினுக்கு ஜெபமாலை பிரகாசி (30) என்ற மனைவியும், பெர்வீன் பாக்கியம் (3), ரசினா பாக்கியம் (8 மாதம்) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.
இறந்த ஜஸ்டின் குடும்பத்தினருக்கு சின்னப்பன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார். அப்போது விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story