நெல்லை அருகே பரபரப்பு ஓடும் பஸ்சில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு - பதற்றம்-போலீஸ் குவிப்பு


நெல்லை அருகே பரபரப்பு ஓடும் பஸ்சில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு - பதற்றம்-போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2019 4:15 AM IST (Updated: 11 Oct 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே ஓடும் பஸ்சில் 2 பேரை அரிவாளால் மர்மநபர்கள் வெட்டினார்கள். அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஸ்ரீவைகுண்டம், 

நெல்லையை அடுத்துள்ள கிள்ளிக்குளத்தில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவில் அரசு பஸ் புறப்பட்டு சென்றது. கிள்ளிக்குளம் அருகில் சென்றபோது, மர்மநபர்கள் அந்த பஸ்சை வழித்து ஏறினார்கள்.

பஸ் சிறிது தூரம் சென்றபோது, அந்த மர்மநபர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் பஸ்சில் பயணம் செய்த 2 பேரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் அலறினார்கள். இதை பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதனால் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். பின்னர் மர்மநபர்கள் பஸ்சில் இருந்து கீழே இறங்கி அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து உடனடியாக முறப்பாடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிள்ளிக்குளம் பகுதி வல்லநாடு அருகே உள்ளது. வல்லநாட்டில் கடந்த சில மாதங்களில் முன்விரோதம் காரணமாக அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்தன. இந்த கொலையில் தொடர்புடைய யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தையடுத்து வல்லநாடு பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நெல்லை அருகே ஓடும் பஸ்சில் 2 பேரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story