எனக்கும், ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன - கோவையில் நடிகை கங்கனா ரனாவத் பேட்டி


எனக்கும், ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன - கோவையில் நடிகை கங்கனா ரனாவத் பேட்டி
x
தினத்தந்தி 10 Oct 2019 11:00 PM GMT (Updated: 10 Oct 2019 8:48 PM GMT)

எனக்கும், ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதாக கோவையில் நடிகை கங்கனா ரனாவத் கூறினார்.

கோவை,

காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு ஆதரவு அளித்துள்ள நடிகை கங்கனா ரனாவத் கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள மகாத்மா கிரீன் இந்தியா மிஷன் நாற்றுப்பண்ணைக்கு வந்தார். அவரை ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் வரவேற்றனர். அங்கு தாய் படுகை தயார் செய்தல், மரக்கன்று வைக்க மண் நிரப்புதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளை செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக தலைவி என்ற படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறேன். இந்த படம் 2 பாகங்களாக எடுக்கப்படுகிறது. நடுத்தர குடும்பத்தில் பிறந்து இளம் வயதில் சினிமா துறையில் நடித்து பின்னர் ஆணாதிக்கத்தை சமாளித்து நிறைய வெற்றிகளை குவித்தவர் ஜெயலலிதா. அவரை போன்றுதான் நானும். எனவே எனக்கும், ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

மேலும் ஜெயலலிதா வெற்றிகரமான அரசியல்வாதியாக மட்டுமின்றி மிகவும் பலமான பெண்மணியாக இருந்துள்ளார். சுயமாக முடிவெடுத்து வாழ்ந்துள்ளார். மொழி அறிவு, பரத நாட்டியம் என பல திறமைகளை கொண்டிருந்த ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன்.

இயக்குனர் ஏ.எல்.விஜய் மிகவும் அமைதியானவர். தாம்தூம் படத்துக்கு பிறகு ஏன் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. கடந்த 8 முதல் 9 ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் ஏ.எல்.விஜயின் பட வாய்ப்பைத் தெரியாமல் தவிர்த்திருந்தாலும், தற்போது ஒரு நல்ல படத்தின் மூலம் மீண்டும் தமிழ் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி.

சினிமாவில் மட்டுமே அரசியலில் ஈடுபடுவேன். நிஜத்தில் ஈடுபடும் எண்ணம் இல்லை. காவிரி கூக்குரல் நிகழ்ச்சியில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இத்திட்டம் மூலம் தமிழகத்துடனான தன்னுடைய உறவு வலுவாகிவிட்டது.

ஈஷா நாற்றுப்பண்ணைகள் அனைத்துக்கும் மகாத்மா கிரீன் இந்தியா மிஷன் என்று புதுப் பெயர் சூட்டி இருக்கிறார்கள். ஈஷா தன்னார்வலர்கள் சமூக நலனுக்காக இரவு, பகலாக சேவையாற்றி வருகிறார்கள். இதுதான் காவேரி கூக்குரல் இயக்கத்தில் இணைவதற்கு என்னை ஈர்த்தது.

இவ்வாறு கங்கனா ரனாவத் கூறினார்.

Next Story