காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி தேர்தலில் முறைகேடு: மறுவாக்கு எண்ணிக்கைக்கு நீதிபதி உத்தரவிடுவார் என்று நம்புகிறேன் சிதம்பரத்தில் திருமாவளவன் எம்.பி. பேட்டி
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதால் மறுவாக்கு எண்ணிக்கைக்கு நீதிபதி உத்தரவிடுவார் என்று நம்புகிறேன் என சிதம்பரத்தில் திருமாவளவன் எம்.பி. கூறினார்.
சிதம்பரம்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது. சிதம்பரம் உள்ளிட்ட டெல்டா பாசன பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் நிதி முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் மோடி-சீன அதிபர் ஆகியோர் மாமல்லபுரத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது. எல்லையோர சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் இந்த சந்திப்பு உலக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சந்திப்பின் மூலம் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறேன்.
கீழடியில் கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகள் தமிழ் சமூகத்தின் தொன்மையை பறை சாற்றுகிறது. 5 கட்ட அகழாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட அகழ்வாய்வுக்கான நிதியை தமிழக அரசே ஒதுக்க வேண்டும். கீழடியில் உள்ள பொருட் களை அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது தடுக்கப்பட வேண்டும்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். 2 தொகுதிகளிலும் விரைவில் பிரசாரம் செய்ய உள்ளேன். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
வருகிற 13-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உலக சாதனை நிகழ்வாக எனது முக வடிவத்தில் ‘பனைமுகம்- திருமுகம்’ என்ற நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படுகிறது. இதில் 10 ஆயிரம் பனை விதைகளை விதைக்கும் திட்டமும், 3 ஆயிரம் இளைஞர்களை கொண்டு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர், பதிவாளர் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர், சிறுபான்மையினர், பெண்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மந்தாரக்குப்பத்தில் ஆதிதிராவிடர் விதவை பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
ராதாபுரம் தொகுதியில் நடந்த முறைகேட்டை போல காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலிலும் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கை விசாரித்து காட்டுமன்னார்கோவில் தொகுதியிலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு நீதிபதி உத்தரவிடுவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story