சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 5 அடி வரை உயர்வு குடிநீர் வாரிய ஆய்வில் தகவல்
சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 2 முதல் 5 அடி வரை உயர்ந்துள்ளது ஆய்வு மூலம் தெரியவந்திருப்பதாக குடிநீர் வாரியம் கூறியுள்ளது.
சென்னை,
டெல்லி நிதி ஆயோக், நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், டெல்லி, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட 21 நகரங்களில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 40 சதவீத மக்களுக்கு 2030-ம் ஆண்டுக்குள் குடிநீர் கிடைக்காதநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 3 நதிகள், 4 நீர்நிலைகள், 5 சதுப்புநில காடுகள் மற்றும் 6 காடுகள் முற்றிலும் நீரின்றி வறண்டுள்ளதாகவும் நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம்
கடந்த சில மாதங்களாகவே போதிய மழையின்மையால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், சென்னையில் நிலத்தடி நீர் பயன்பாடு மிகவும் அதிகரித்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் சரிந்து அதலபாதாளத்துக்கு சென்றது. சென்னை மாநகர மக்களின் ஒரு நாள் குடிநீர் தேவை 830 மில்லியன் லிட்டர். ஆனால் குடிநீர் வினியோகம் 500 மில்லியன் மட்டுமே.
இதனால் சென்னையில் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு நிலத்தடி நீர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வரைமுறை இன்றி நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வந்தது.
145 கிணறுகள்
இந்தநிலையில் சென்னையில் உள்ள 145 கிணறுகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் குறித்து குடிநீர் வாரியம் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் மழை பெய்ய தொடங்கியதால் நிலத்தடி நீர்மட்டம் 2 முதல் 5 அடி வரை உயர்ந்துள்ளது என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிப்போகும் என்ற நிதி ஆயோக்கின் அறிக்கையையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறோம் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story