ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து நெரிசல்
கிழக்குகடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை,
சீன அதிபர் வருகையையொட்டி, கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சீன பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். கிண்டியில் ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் வரை இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் காரணமாக கிழக்குகடற்கரை சாலையில் வாகனங்கள் செல்வது முழுமையாக நிறுத்தப்பட்டது. கிழக்கு கடற்கரை இணைப்பு சாலைகளில் வந்த வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்ததால் வாகனங்களில் சென்றவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
இந்த ஒத்திகையின் காரணமாக பொதுமக்கள் பழைய மாமல்லபுரம் சாலையை பயன்படுத்த தொடங்கினர். இதனால் கேளம்பாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் வாகனங்கள் நின்று கொண்டு இருந்தன. போக்குவரத்தை சீர்செய்ய வேண்டிய பணியில் போலீசார் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்தை சீர் செய்தனர். இதைத் தொடர்ந்து நீண்ட நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து நெரிசல் மெல்ல மெல்ல சீரானது.
Related Tags :
Next Story