புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் குடிமராமத்து திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் குடிமராமத்து திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Oct 2019 4:30 AM IST (Updated: 11 Oct 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சத்திரம் மற்றும் நாமகிரிப்பேட்டை பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்ட பணிகளை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம் மற்றும் நாமகிரிப்பேட்டை பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன் தொடக்கமாக புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் நவணி ஊராட்சி சின்ன ஏரியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டார். பின்னர் சின்ன ஏரிக்கு நீர் வரும் வாய்க்கால்கள் மற்றும் சின்ன ஏரியில் நீர் நிரம்பிய பின்னர் வெளியேறும் பகுதி, அதற்கான நீர்பாதை குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

தூர்வாரும் பணி

சின்ன ஏரிக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால் மற்றும் வெளியேறும் வாய்க்கால் ஆகியவற்றில் தலா 100 மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளுமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் அவர் பொதுப்பணித்துறையின் மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பெரப்பஞ்சோலை அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்கு நீர் செல்லும் வாய்க்காலில் கான்கிரீட் சுவர் கட்டப்பட்டு உள்ளதையும், பெரப்பஞ்சோலை அணைக்கட்டில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு உள்ள பணிகளையும் நேரில் பார்வையிட்டார்.

தடுப்பணைகள்

அப்போது விவசாயிகள் தங்கள் பகுதியில் குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பணைகள் அமைத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளுக்கு நீர் கிடைக்கும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கவுதமன், உதவி செயற்பொறியாளர் கவிதாராணி உள்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story