மாவட்ட செய்திகள்

உடுமலை -மடத்துக்குளத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + All India Agricultural Workers Union demonstration

உடுமலை -மடத்துக்குளத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உடுமலை -மடத்துக்குளத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உடுமலை, மடத்துக்குளத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலை,

உடுமலை தாலுகாவில் சொந்தமாக இடமோ, வீடோ இல்லாத ஏழை,எளிய மக்களுக்கு இலவச‌ வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். ‌சின்னவீரம்பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களையும், அதன் புல வரை படத்தையும் கிராம வருவாய் ஆவணங்களில் தாக்கல் செய்து பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எலையமுத்தூர் கிராமத்தில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டு மனைப்பட்டாவில் உள்ளபடி நிலத்தை அளந்து ஒப்படைக்க வேண்டும்.


60 வயதான முதியவர்களுக்கும், விதவைகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கம் உடுமலை கமிட்டியின் சார்பில் நேற்று உடுமலை கச்சேரி வீதியில் உள்ள நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க உடுமலை ஒன்றிய தலைவர் ஆர்.மாசாணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ.பஞ்சலிங்கம், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் வி.தம்புராஜ், தலைவர் வெ.ரங்கநாதன் ஆகியோர் பேசினர்.

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், துணைத் தலைவர் எஸ்.பரமசிவம், ஒன்றிய செயலாளர் ஏ.பாலதெண்டபாணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். விவசாயத்தொழிலாளர் சங்க உடுமலை ஒன்றிய செயலாளர் எம்.ரங்கராஜ் நன்றி கூறினார். இதில் பலர் கலந்துகொண்டனர். பின்னர் உடுமலை தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் தயானந்தனிடம் கோரிக்கை மனுவைக்கொடுத்தனர்.

இதுபோல் மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி, மாசாணம், மாரியப்பன், தெண்டபானி, ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலையை 200 நாட்களாகவும், தினக்கூலியை 400 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தின்படி 60 வயதான அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசியமான உணவுப் பொருட்களையும் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். நில உச்சவரம்பு சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்ட பூமிக்கு கண்டிஷன் பட்டாவை மாற்ற வேண்டும். குமரலிங்கம் பேரூராட்சியில் 2 ஆண்டுக்கு முன்பு பட்டா வழங்கி இன்னும் இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை, எனவே அப்பகுதியில் உள்ள பயனாளிகள் நில அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.