சங்கரன்கோவில் அருகே பரிதாபம்: வெறிநாய்கள் கடித்து குதறியதில் 2-ம் வகுப்பு மாணவன் பலி
சங்கரன்கோவில் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 2-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
பனவடலிசத்திரம்,
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சேதுபதி, விவசாயி. அவருடைய மகன் சந்தோஷ் (வயது 8). இவன் அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். சந்தோஷ் தினமும் பள்ளிக்கூடத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவான். அதன்பிறகு வெளியில் விளையாட சென்றுவிட்டு இரவு 7 மணிக்கு திரும்பி வருவது வழக்கமாக இருந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த சந்தோஷ் விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளான். பின்னர் இரவில் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவனது பெற்றோர் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர்.
ஆனால் எங்கும் சந்தோஷ் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மேலும் ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தேடினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் என்பவருடைய தோட்டத்தின் அருகே ஏதோ சத்தம் கேட்டு ஓடிச்சென்றனர். அங்கு 10-க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சந்தோசை கடித்து குதறிக் கொண்டிருந்தன.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஓடிச் சென்று நாய்களை விரட்டியடித்தனர்.
உடனே சந்தோசை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்செல்ல முயன்றனர். ஆனால், அவன் இறந்து விட்டது தெரியவந்தது. உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
வெறிநாய்கள் கடித்து குதறியதில் 2-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story