சிறுமி காணாமல்போன வழக்கு: அப்பாவி பெண்களை அடித்து துன்புறுத்துகிறார்கள்; போலீசார் மீது கிராம மக்கள் புகார்


சிறுமி காணாமல்போன வழக்கு: அப்பாவி பெண்களை அடித்து துன்புறுத்துகிறார்கள்; போலீசார் மீது கிராம மக்கள் புகார்
x
தினத்தந்தி 12 Oct 2019 4:15 AM IST (Updated: 12 Oct 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

சிறுமி காணாமல் போன வழக்கு தொடர்பாக அப்பாவி பெண்களை போலீசார் அடித்து துன்புறுத்துவதாக கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

கோவை,

கோவையை அடுத்த சூலூர் ஊராட்சி ஒன்றியம் காடம்படி ஊராட்சி குமாரபாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குமாரபாளையம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், கவிதா தம்பதியின் மகள் ஷாமினி (வயது 4) கடந்த 5-ந் தேதி வீட்டின் அருகே கோவில் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தாள். அதன்பிறகு சிறுமி ஷாமினியை காணவில்லை. இதனால் கிராமமக்கள் சேர்ந்து தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இ்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் இந்த ஊரை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேரை அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அந்த பெண்களை போலீசார் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

சிறுமி காணாமல் போய் பல நாட்கள் ஆகியும் அதை கண்டுபிடித்து தர எவ்வித நடவடிக்கையையும் போலீசார் எடுக்க வில்லை. ஆனால் குற்றத்தை ஒப்புக்கொள்ளா விட்டால் வழக்கு போடுவோம் என்று கூறி அப்பாவி பெண்கள் மற்றும் ஆண்களை போலீசார் அடித்து துன்புறுத்தி மிரட்டுகின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காணாமல் போன சிறுமியை கண்டு பிடித்து விரைவாக மீட்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story