பொள்ளாச்சி அருகே பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி மும்முரம்


பொள்ளாச்சி அருகே பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 11 Oct 2019 10:15 PM GMT (Updated: 11 Oct 2019 7:15 PM GMT)

பொள்ளாச்சி அருகே பாலாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி,

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழை மூலம் பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். மலை அடிவாரத்தில் நல்லாத்துமுடக்கு என்ற இடத்தில் தொடங்கும் பாலாறு சமத்தூர், பூவலபருத்தி, அர்த்தநாரிபாளையம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று அம்பராம்பாளையம் ஆழியாற்றில் கலக்கிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே அமணலிங்காபுரத்தில் இருந்து அங்கலகுறிச்சி சாலைக்கு செல்ல பாலாற்றின் குறுக்கே சிறியதாக பாலம் கட்டப்பட்டது.

இந்த பாலத்தின் வழியாக விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்வதும், விளைபொருட்களை மார்க்கெட்டுக்கு வாகனங்களில் கொண்டு சென்றும் வருகின்றனர். இதை தவிர அங்கலகுறிச்சி, ஆழியாறு போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆண்டுதோறும் பெய்யும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். மேலும் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிறு பாலம் தண்ணீரில் மூழ்கி விடும்.

இதன் காரணமாக அமணலிங்காபுரத்தில் இருந்து அங்கலகுறிச்சி செல்லும் சாலை வரை மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிரதம மந்திரியின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி துறை அமைச்சகம் மேம்பாலம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பாலம் கடடுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது 4 தூண்கள் அமைக்கும் பணி பாதி முடிவடைந்த நிலையில் 5-வது தூண் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளன. ஆனைமலை ஒன்றிய அதிகாரிகள் மேம்பால பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் புதிய பாலம் கட்டுவதால் பழைய சிறு பாலத்தை இடிக்க கூடாது. மழைக்காலங்களில் சிறு பாலத்தில் தண்ணீர் தேங்குவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்கள் ஒன்றிய அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story