நெல்லை அருகே ஓடும் பஸ்சில் 2 பேரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது


நெல்லை அருகே ஓடும் பஸ்சில் 2 பேரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 11 Oct 2019 10:30 PM GMT (Updated: 11 Oct 2019 7:17 PM GMT)

நெல்லை அருகே ஓடும் பஸ்சில் 2 பேரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரையைச் சேர்ந்தவர் மூக்காண்டி. இவருடைய மகன் முருகன் (வயது 35). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் நெல்லை அருகே வல்லநாட்டை அடுத்த கிள்ளிக்குளம் பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலைக்கு சென்றார். பின்னர் அவர், இரவில் கிள்ளிக்குளத்தில் இருந்து தனது ஊருக்கு அரசு பஸ்சில் புறப்பட்டு சென்றார். அப்போது முருகன் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பஸ்சில் மணக்கரை கீழூரைச் சேர்ந்த விவசாயி கணபதி (55) என்பவரும் பயணம் செய்தார். கிள்ளிக்குளம் வேளாண்மை கல்லூரி அருகில் பஸ் சென்றபோது, முருகன் தனக்கு அமர இருக்கை தருமாறு கூறி, கணபதியிடம் தகராறு செய்தார்.

அப்போது ஆத்திரம் அடைந்த முருகன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கணபதியை சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க முயன்ற மற்றொருவருக்கும் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்த பயணிகள் கூச்சலிட்டதால், டிரைவர் பஸ்சை நிறுத்தினார். உடனே முருகன் பஸ்சில் இருந்து இறங்கி, இருளில் தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த கணபதியை பஸ்சில் இருந்தவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

வல்லநாடு பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் கொலை சம்பவங்கள் நடந்ததால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story