தோட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற வசதியாக வால்பாறையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்; தேயிலை தொழிற்சங்க பிரதிநிதிகள் கோரிக்கை


தோட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற வசதியாக வால்பாறையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்; தேயிலை தொழிற்சங்க பிரதிநிதிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2019 11:00 PM GMT (Updated: 11 Oct 2019 7:19 PM GMT)

தோட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற வசதியாக வால்பாறையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என்று தேயிலை தொழிற்சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை,

கோவையில் உள்ள தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகத்தில் ஆனைமலை தோட்ட அதிபர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தோட்ட அதிபர்கள் சங்க தலைவர் மகேஸ்நாயர் தலைமை தாங்கினார். செயலாளர் பிரதீப் சுகுமார், ஆலோசகர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வால்பாறை அமீது கலந்து கொண்டு பேசினார். தோட்ட நிர்வாகங்களின் பஸ்கள் செல்லும் சாலைகளை சீரமைக்க முடியாத நிலை உள்ளது. எனவே அது போன்ற சாலைகளை, வால்பாறை நகராட்சி நிர்வாகத்துக்கு தோட்ட நிர்வாகத்தினர் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சிகிச்சை பெற வசதியாக வால்பாறையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே போனஸ் வழங்க வேண்டும். சம்பளத்தை அந்தந்த அலுவலகங்களில் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கான வரி பிடித்தத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதர கோரிக்கைகள் தொடர்பாக ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கமும், தொழிற்சங்கங்களும் ஒரு மாத காலத்துக்குள் பேசி முடிவெடுப்பது, கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறுவதாக இருந்த போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாகவும் கூட்டமைப்பு தலைவர் வால்பாறை அமீது தெரிவித்தார்.

இதே கோரிக்கையை தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இந்த கூட்டத்தில் தோட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் சவுந்திரபாண்டியன், கருப்பையா, மோகன், எட்வர்டு, வீரமணி, கேசவமருகன், வர்கீஸ், கந்தசாமி, அருணகிரி பாண்டியன் தர்மராஜ், பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story