கம்மாபுரம் அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்


கம்மாபுரம் அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2019 3:45 AM IST (Updated: 12 Oct 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

கம்மாபுரம் அருகே குடிநீர் குழாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்மாபுரம்,

கம்மாபுரம் அடுத்த கே.தொழூரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொழூரில் இருந்து காவனூர் வரை 1050 மீட்டர் தொலைவுக்கு புதிதாக குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த சில நாட்களாக அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

இதில் அப்பகுதியில் தரமற்ற குழாய் அமைத்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் தரமான குழாய் அமைக்கக்கோரி கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமாவிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை அதிகாரிகள் யாரும் வரவில்லை என தெரிகிறது. இதனால் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தொழூர்-காவனூர் செல்லும் சாலையில் காலி குடங்களுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தரமான குடிநீர் குழாய் பொருத்தி, பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர். பின்னர் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் அவர்களாகவே போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story