வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2019 10:30 PM GMT (Updated: 11 Oct 2019 8:16 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர், 

வீட்டு மனைப்பட்டா இல்லாத அனைவருக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் படி 60 வயது முடிவடைந்த அனைத்து முதியோர்களுக்கும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ரே‌‌ஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் கலைமணி, மாவட்ட துணைச்செயலாளர் மணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் நிர்வாகிகள் மகாலிங்கம், அம்பிகா, சண்முகம், ஜோதிபாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கைலாசம், ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம், விவசாய சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் முனியாண்டிஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சுமதி ஆகியோர் பேசினர்.

நன்னிலம் தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மாவட்ட செயலாளர் குமாரராஜா, ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story