அக்காள்-தம்பி வீடுகளில் நகை திருட்டு: 2 வாலிபர்கள் கைது


அக்காள்-தம்பி வீடுகளில் நகை திருட்டு: 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 12 Oct 2019 4:00 AM IST (Updated: 12 Oct 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் அக்காள்-தம்பி வீடுகளில் நகை திருடிய திருச்சி உறையூரை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை விரிவாக்க பகுதிகளில் வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்கவும் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி தமிழ்ப்பல்கலைக்கழக குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், சுவாமிநாதன், ஏட்டுகள் இளவரசன், உமாசங்கர், ரமே‌‌ஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.தஞ்சை மேலவஸ்தாசாவடி ரவுண்டானா பகுதியில் 2 பேர் சந்தேகத்தின்பேரில் சுற்றி திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, அந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், 2 பேரையும் தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் திருச்சி உறையூரை சேர்ந்த பொன்னம்பலம் மகன் மோகன்ராஜ்(வயது32), வடிவேல் மகன் சங்கர்(30) என்பதும், தஞ்சை மேலவஸ்தாசாவடி அசோக்நகர் 8-வது தெருவில் வசித்து வரும் சாமிநாதன், இவருடைய அக்காள் இந்திரா ஆகியோர் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இவர்கள் வீடுகளில் 20 பவுன் நகை திருட்டு போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளிப்பொருட்கள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது பல்வேறு மாவட்டங்களில் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.

Next Story