தங்க புதையல் கிடைத்து திடீர் பணக்காரர் ஆனதாக தகவல்: ரவுடி கும்பல் துணையுடன் வாலிபரை கடத்திய 2 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை
கருங்கல் அருகே தங்க புதையல் கிடைத்து திடீர் பணக்காரர் ஆனதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த வாலிபரை, ரவுடி கும்பல் துணையுடன் 2 போலீஸ்காரர்கள் கடத்தியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பெண் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கருங்கல்,
குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வின் (வயது 26). இவர் அப்பகுதியில் உள்ள ஒருவரிடம் பொக்லைன் எந்திர டிரைவராக பணியாற்றி வருகிறார். டிரைவராக இருந்த செல்வினிடம் திடீரென பணப்புழக்கம் அதிகமானது. மேலும், 3 பொக்லைன் எந்திரம், 2 சொகுசு கார்கள் ஆகியவற்றை வாங்கி தொழில் செய்தார். டிரைவராக வேலை செய்தவர் திடீரென சினிமாவில் வருவது போல பெரிய பணக்காரர் ஆனது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சந்தேகம் எழுந்தது.
இந்தநிலையில் செல்வின் தனது நண்பர் ஒருவரிடம், தனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்துக்கு தங்க புதையல் கிடைத்ததுதான் காரணம் என்று கூறியதாக தெரிகிறது.
இதை அந்த நண்பர் மூலம் கருங்கல் போலீஸ் நிலையத்தை சேர்ந்த 2 போலீஸ்காரர்களுக்கு தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து அவர்கள் ரவுடி கும்பல் உதவியுடன் செல்வினை கடத்தி புதையல் பற்றிய தகவலை தெரிந்து கொண்டு அவரிடம் இருந்து பணத்தை பறிக்க முடிவு செய்தனர்.
அதன்படி சம்பவத்தன்று 2 போலீஸ்காரர்கள் சில ரவுடிகளுடன் சேர்ந்து நண்பர் மூலம் செல்வினை தொடர்பு கொண்டு நெல்லை அருகே மான்கறி கிடைக்கிறது. அதை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று ஆசை வார்த்தை கூறி செல்வினை நெல்லைக்கு காரில் அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்றதும் செல்வினை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்திச் சென்று புதையல் எப்படி கிடைத்தது? பணம் எப்படி வந்தது என்பது பற்றி கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது, புதையல் எதுவும் கிடைக்க வில்லை. வங்கியில் லோன் மூலம் வாகனங்கள் வாங்கியதாக கூறினார். இதை அவர்கள் நம்பாததால் செல்வின் புதையலை பற்றி ரீத்தாபுரத்தில் உள்ள தனது முதலாளியிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த கும்பல் செல்வினை அழைத்துக்கொண்டு ரீத்தாபுரம் வந்தனர். பின்னர், முதலாளியை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு செல்வின் கூறினார். சம்பவ இடத்துக்கு வந்த அவர், நிலைமையை புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் ஆத்திரமடைந்த போலீஸ்காரர்கள், செல்வினை சரமாரியாக தாக்கி உள்ளனார். தொடர்ந்து அவர்கள் செல்வினை முதலாளியின் இருப்பிடத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது, செல்வின் அவர்களிடம் இருந்து தப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து செல்வின் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில், செல்வினை கடத்திய சம்பவத்தில் கருங்கல் போலீஸ் நிலையத்தை சேர்ந்த 2 போலீசாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த 2 போலீசாரையும் உதவி சூப்பிரண்டு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே கடத்தலின் போது பயன்படுத்தப்பட்ட செல்வினுக்கு சொந்தமான 2 கார்களை போலீசார் மீட்டனர்.
மேலும், இந்த கடத்தல் வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டு செல்வினை கடத்த போலீசாருக்கு உதவிய ரவுடி கும்பல் யார்?, செல்வினுக்கு தங்க புதையல் கிடைத்ததா?, அவரின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவரம் குறித்து சேகரிக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், செல்வின், 2 போலீஸ்காரர்கள் என 3 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த கடத்தல் சம்பவத்தில் ஒரு பெண் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால், அவரையும் விசாரணை வளையத்துக்குள் தனிப்படையினர் கொண்டு வந்துள்ளனர்.
தங்க புதையல் கிடைத்ததாக நினைத்து வாலிபரை போலீஸ்காரர்கள் கடத்திய சம்பவம் கருங்கல் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story