சீர்காழி அருகே கார் மீது டேங்கர் லாரி மோதல்: கணவன்-மனைவி-மகள் உடல் நசுங்கி பலி
சீர்காழியில், கார் மீது டேங்கர் லாரி மோதியதில் கணவன்-மனைவி-மகள் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சீர்காழி,
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம்(வயது 62). ஸ்தபதியான இவர், தனது மருமகன் சரவணன் என்பவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு காரில் குடும்பத்துடன் சென்றார்.
காரில் சோமசுந்தரத்தின் மனைவி சாந்தி(55), மகள் சுமத்திரா(35), பேரன் புவனேஸ்வரன்(14), உறவினர்கள் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் திருசன்னபுரம் மேலத்தெருவை சேர்ந்த நடனம் மனைவி அன்னபூரணி(52), கார் டிரைவர் செந்தில்குமார்(42), செந்தில்குமார் மகள் சாய்ஸ்ரீ(7) ஆகியோர் சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து சரவணனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சுமார் 11 மணி அளவில் சோமசுந்தரம் உள்ளிட்டோர் சென்னையில் இருந்து புறப்பட்டு பூந்தோட்டம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் நாகை மாவட்டம் சீர்காழி புறவழிச்சாலையில் கார் வந்த போது பட்டுக்கோட்டையில் இருந்து சென்னையை நோக்கி பால் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சோமசுந்தரம், அவரது மனைவி சாந்தி, மகள் சுமத்திரா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சீர்காழி போலீசார் படுகாயம் அடைந்த அன்னபூரணி, டிரைவர் செந்தில்குமார், சரவணனின் மகன் புவனேஸ்வரன் (14) ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் சிறுமி சாய்ஸ்ரீ, அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
இது குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி எடமேலையூர் தெற்கு நடுத்தெருவை சேர்ந்த மருதமுத்து மகன் அபிஜித்(வயது26) என்பரை கைது செய்தனர்.
இந்த விபத்தால் சீர்காழி புறவழிச்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் கணவன்-மனைவி-மகள் பலியான சம்பவம் பூந்தோட்டம் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story