கரூர் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி - மாணவ-மாணவிகள் கண்டுகளித்தனர்
கரூர் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை மாணவ-மாணவிகள் கண்டுகளித்தனர்.
கரூர்,
பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் சிந்தனையை வெளிக்கொணரும் பொருட்டு கரூர் கல்வி மாவட்ட அளவிலான ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சி, காந்திகிராம புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதனை மாவட்ட கல்வி அதிகாரி சிவராமம் தொடங்கி வைத்தார். மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்காட்சியில் கடல்நீரை குடிநீராக்கும் எந்திரம் செயல்படும் விதம், மின்காந்த விசை மூலம் ரெயில் இயக்கம், மின்ஒளி மூலம் ஒலிப்பெருக்கியை இயக்கும் செயல்பாடு, ஆழ்குழாய் கிணறு, ஏரி-குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மழைநீரை சேமித்து நீர்மேலாண்மையை கையாள்வது, நாகரிக உலகில் உடல் ஆரோக்கியத்தின் அவசியம், மண்பானை சமையலின் மகத்துவம், பாதுகாப்புடன் வெடிபொருட்களை கையாள்வது, பிளாஸ்டிக்கை தவிர்த்து சுற்றுப்புறத்தினை மேம்படுத்துவது உள்ளிட்டவை பற்றிய பல்வேறு படைப்புகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
கரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் படைப்புகளை உருவாக்கி காட்சிபடுத்தியிருந்தன. அறிவியல், கணிதம், ஆசிரியர் படைப்பு என மொத்தம் 200 படைப்புகள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முதுகலை ஆசிரியர்கள் குழுவினர் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். மேலும் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் இந்த கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். அப்போது படைப்புகளை வைத்திருந்த மாணவர்கள் அதற்குரிய விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முத்துகிருஷ்ணன் கண்காட்சியை பார்வையிட்டு, மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கல்வி மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட 25 படைப்புகளுக்காக பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. கரூர், குளித்தலை கல்வி மாவட்டத்தில் தேர்வான மாணவர்களுக்கிடையே வருகிற 15-ந்தேதி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி புலியூர் ராணிமெய்யம்மை பள்ளியில் நடக்கிறது. அதனை தொடர்ந்து மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி வருகிற 30, 31 மற்றும் நவம்பர் 1-ந்தேதிகளில் வெண்ணைமலையில் உள்ள சேரன் மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story