பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2019 10:30 PM GMT (Updated: 11 Oct 2019 8:17 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குளித்தலை, 

கரூர் மாவட்டம், குளித்தலை வட்ட பகுதியில் வசிக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் இலவச பட்டா மற்றும் வீட்டுமனை வழங்கவேண்டும். கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கவேண்டும், முதியோர், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை வழங்கவேண்டும். ஊராட்சி பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைவரையும் வறுமை கோட்டு பட்டியலில் இணைத்து புதிய பட்டியல் தயார் செய்யவேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் நிபந்தனையின்றி அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்குவதோடு, அவர்களுக்கான கூலி ரூ.229-யை முழுமையாக வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் குளித்தலையில் நேற்று நடைபெற்றது.

சங்கத்தின் குளித்தலை ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையில், குளித்தலை காந்திசிலை பகுதியிலிருந்து ஊர்வலமாக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பலர் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தலைமையிடத்து தனிவட்டாட்சியரான இந்துமதியிடம் தங்கள் மனுக்களை வழங்கினர். இதில் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்துவிட்டு பின்னர் கலைந்து சென்றனர்.

Next Story