பெரம்பலூரில் துணிகரம்: மின்வாரிய அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருட்டு


பெரம்பலூரில் துணிகரம்: மின்வாரிய அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 11 Oct 2019 10:45 PM GMT (Updated: 11 Oct 2019 8:17 PM GMT)

பெரம்பலூரில் பட்டப்பகலில் துணிகரமாக மின்வாரிய அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை- ரூ.1 லட்சம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உதவி கணக்கு அலுவலராக பணிபுரிந்து வரும் பொன்னுசாமி(வயது 58) என்பவர், தனது மனைவி சின்னம்மாள், மகன் சத்தியநாராயணன்(14) மற்றும் மனைவியின் தங்கை மகள் சவுந்தர்யா(22) ஆகியோருடன் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள 11-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.கே.சி.நகர் சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பொன்னுசாமி அலுவலகம் சம்பந்தமாக திருச்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு காலையிலேயே சென்று விட்டார். 9-ம் வகுப்பு படிக்கும் மகன் சத்தியநாராயணனும் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த சின்னம்மாள் மற்றும் சவுந்தர்யா ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், வீட்டின் அருகே உள்ள பாலமுத்து குமரன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டனர். சாமி கும்பிட்டு விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து சின்னம்மாள், சவுந்தர்யா ஆகியோர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது 2 அறைகளில் இருந்த பீரோக்களும் திறந்து கிடந்தது. சவுந்தர்யாவின் திருமணத்திற்காக பொன்னுசாமி பீரோக்களில் வைத்திருந்த இருந்த 5 பவுன் நகை, ரூ.1 லட்சம், வெள்ளி கொலுசுகள் ஆகியவை திருடு போயிருந்தது. மேலும் அந்த வீட்டின் பக்கத்து வீடான இரும்பு கடை நடத்தி வரும் தங்கலிங்கத்தின்(52) வீட்டின் வளாக கதவின் பூட்டும், வீட்டின் நுழைவு வாயில் கதவின் கீரில் கேட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் தங்கலிங்கத்தின் வீட்டில் திருடு ஏதும் போகவில்லை. இதுகுறித்து தகவலறிந்து பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையிலான பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

திருட்டு நடந்த வீட்டின் அருகே ஒரு காரில் 2 பேர் சந்தேகம்படும்படியாக சுற்றி திரிந்ததாகவும், அவர்கள் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் போலீசார் திருட்டு நடந்த வீட்டின் அருகே உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் நிஞ்சா திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் ஓடியது, யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பெரம்பலூர் நகர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் நடந்து வருவதாலும், குடியிருப்பு நிறைந்த பகுதியில் பட்டப்பகலில் இந்த துணிகர திருட்டு சம்பவம் நடந்ததாலும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.

Next Story