நாகர்கோவில் நகரில் மோசமான சாலைகளால் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி


நாகர்கோவில் நகரில் மோசமான சாலைகளால் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 11 Oct 2019 10:00 PM GMT (Updated: 11 Oct 2019 8:18 PM GMT)

நாகர்கோவில் நகரில் மோசமான சாலைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

நாகர்கோவில், 

நாகர்கோவில் நகரில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நடைபெறும் பகுதிகளில் எல்லாம் சாலைகள் குண்டும், குழியுமாகவும், மேடு, பள்ளங்களாகவும் மிகவும் மோசமாக காட்சி அளிக்கின்றன. சில இடங்களில் நடந்து செல்ல முடியாத நிலையிலும், வாகனங்கள் சீராக செல்ல முடியாத வகையிலும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையிலும் சாலைகள் உள்ளன.

இது ஒருபுறமிருக்க குடிநீர் திட்டப்பணிகளுக்காகவும் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்படுகின்றன. இதனால் நன்றாக இருந்த சாலைகளும் மண்சாலைகளாகவும், சேறும் சகதியும் நிறைந்த சாலைகளாகவும், மரணக்குழிகள் உள்ள சாலைகளாகவும் காட்சி தருகின்றன.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் நகரின் பிரதான சாலைகளில் ஒன்றான கலெக்டர் அலுவலக சாலை (கே.பி.ரோடு), கோட்டார் சந்திப்பு முதல் பீச்ரோடு செல்லும் சாலை, ராமன்புதூர் சந்திப்பு பகுதியில் உள்ள சாலைகள், பழைய பால்பண்ணை சந்திப்பு முதல் கிறிஸ்துநகர் செல்லும் சாலை என நகரின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன.

இப்படிப்பட்ட சாலைகளால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேடு, பள்ளங்கள் விழுந்த சாலைகளால் ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பலர் காயம் அடைகின்றனர். சில விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலை இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் இருந்து மத்தியாஸ் வார்டு சந்திப்பு அருகில் வரை தார்சாலை மண்சாலையாக காட்சி அளிக்கிறது. மேலும் படுபயங்கரமான குழிகளும் சாலையில் விழுந்துள்ளன. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் உண்டாகிறது. மழை காலங்களில் இந்த சாலையில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்தநிலையில் இந்த சாலையில் சென்ற ஒரு வேன் திடீரென பழுதாகி சாலையோரம் நின்றது. இதனாலும், சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளம், மேடுகளாலும் வாகனங்கள் சீரான வேகத்தில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் கலெக்டர் அலுவலக சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடி சென்றன.

இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகன ஓட்டிகள், பஸ்கள், வேன்களில் சென்ற பயணிகள், கனரக வாகன ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பாதசாரிகள் அனைவரும் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

Next Story