நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவில்,
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க குமரி மாவட்ட குழு சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு எனக்கூறி ரேஷன் திட்டத்தை முடக்க கூடாது, ஏழைகள் அனைவருக்கும் முன்னுரிமை அட்டை என திருத்தம் செய்து ரேஷன் பொருட்கள் குறைவின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சொந்த வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீடு வழங்குவது அவசியம், நகரத்தில் அடுக்குமாடி மற்றும் கிராமத்தில் தொகுப்பு வீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு அரசு அறிவித்தபடி 3 சென்ட் வீட்டுமனை வழங்க வேண்டும், மாற்றிடம் வழங்காமல் புறம்போக்கில் உள்ள வீடுகளை அகற்ற கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மலைவிலை பாசி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிவதாணு, பழனிவேல், விஜயகுமார், ஜெயராஜ், டேவிட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஒரு கோடி விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் நிறைவேற்ற மறுத்து வருகின்றன. மேலும் முன்னுரிமை குடும்பங்கள் மற்றும் முன்னுரிமை அற்ற குடும்பங்கள் என பிரிக்கப்பட்டு முன்னுரிமை அற்ற குடும்பங்களுக்கு ரேஷன் அரிசி அளவு குறைக்கப்பட்டு உள்ளது. எனவே முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அற்ற குடும்பங்கள் என்று பிரிப்பதை ரத்து செய்ய வேண்டும்.
குமரி மாவட்டத்தில் முந்திரி மற்றும் ரப்பர் தொழில் முடங்கி இருக்கிறது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்து 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு செல்கின்றனர். எனவே 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். மேலும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்தை பாக்கி இல்லாமல் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.
மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி வரி சலுகைகள் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு 2 நாட்டு உறவை மேம்படுத்த பயன்படும் என்று நம்புகிறேன். அமைச்சர்கள் வெளிநாடு செல்வது தவறு இல்லை. ஆனால் வெளிநாடு செல்வதையே வேலையாக வைத்துக்கொள்வது தான் தவறு. சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது போல உள்ளாட்சி ேதர்தலும் நடத்தப்பட வேண்டும். விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு அதில் பங்கேற்ற அனைவரும் கோரிக்கை மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு படையெடுத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை தடுத்தனர். பின்னர் முக்கியமான நிர்வாகிகள் மட்டும் மனு அளியுங்கள் என்று வலியுறுத்தினர். ஆனால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அனைவரிடமும் மனு வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பிறகு மனு அளித்துவிட்டு அவர்கள் கலைந்துசென்றனர்.
Related Tags :
Next Story