மத்தூரில் டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.2 லட்சம் பறிக்க முயற்சி


மத்தூரில் டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.2 லட்சம் பறிக்க முயற்சி
x
தினத்தந்தி 12 Oct 2019 4:30 AM IST (Updated: 12 Oct 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

மத்தூரில் போலீஸ் போல நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.2 லட்சம் பறிக்க முயன்ற ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் சின்ன ஏரி அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடையில் விற்பனையாளர்கள் வழக்கம் போல கடையை திறந்து வைத்து இரவு வரை மதுபானங்களை விற்பனை செய்தனர்.

நேற்று முன்தினம் காலையில் விற்பனையாளரான மத்தூர் அருகே உள்ள ஓபுலிகாட்டூரை சேர்ந்த மகேந்திரன் என்பவர் மதுபானங்களின் இருப்பை சரிபார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒருவர் வந்தார். தான் மது விலக்கு தனிப்பிரிவு போலீஸ் என்றும், எதற்காக காலை நேரத்தில் கடையை திறந்து வைத்துள்ளாய் என மிரட்டும் வகையில் பேசினார்.

தொடர்ந்து மதுபானங்களை விற்று எவ்வளவு பணம் உள்ளது? என்று கேட்டுள்ளார். இதனால் பயந்து போய் விற்பனையாளர் மகேந்திரன் ரூ.2 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாகவும், அந்த பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். அந்த நேரம் போலீஸ் என கூறிய ஆசாமி, அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தான் வந்த மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி செல்ல முயன்றார்.

இதை கவனித்த மகேந்திரன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரிடம் இருந்து பணத்தை மீட்டார். இதற்கிடையே மர்ம ஆசாமி மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். காக்கி நிற பேண்ட், வெள்ளை நிற சட்டை அணிந்தவாறு தலைக்கு தொப்பியும், முகத்தை மூடியவாறும் அந்த நபர் சென்றுள்ளார். இவை அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி, டாஸ்மாக் கடை ஊழியரிடம் பணத்தை பறிக்க முயன்ற நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஊத்தங்கரை அருகே 2 டாஸ்மாக் ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கடந்த ஆகஸ்டு மாதம் குருபரப்பள்ளி அருகே டாஸ்மாக் ஊழியரை கொன்று ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். அதே போல ஓசூர் பகுதியிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் ஊழியர் முகத்தில் மிளகாய் பொடியை தூவி பணம் பறித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story