சேலம் அரசு ஆஸ்பத்திரியில் லாரி டிரைவருக்கு கத்திக்குத்து


சேலம் அரசு ஆஸ்பத்திரியில் லாரி டிரைவருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 12 Oct 2019 4:00 AM IST (Updated: 12 Oct 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் லாரி டிரைவர் கத்தியால் குத்தப்பட்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம், 

சேலம் மாநகரின் மைய பகுதியில் உள்ள சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி உள்பட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் தினமும் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் பலர் உள்நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பார்ப்பதற்காக உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்கின்றனர்.

சேலம் கன்னங்குறிச்சி செட்டிச்சாவடி மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கனகவேல்(வயது 28). லாரி டிரைவரான இவர் நேற்று தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அவர் சூப்பர் ஸ்பெ‌ஷாலிட்டி ஆஸ்பத்திரி பின்புறம் பகுதியில் நண்பருடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு கோரிமேட்டை சேர்ந்த சங்கர் என்பவர் வந்தார். முன்விரோதம் காரணமாக இவருக்கும், கனகவேலுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கனகவேலை குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கத்திக்குத்தில் காயமடைந்த கனகவேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரம்மாள் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சங்கரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story