டெங்கு தடுப்பு பணிகள் குறித்து சேலத்தில் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை


டெங்கு தடுப்பு பணிகள் குறித்து சேலத்தில் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 11 Oct 2019 10:15 PM GMT (Updated: 11 Oct 2019 8:18 PM GMT)

சேலத்தில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ராமன் ஆலோசனை மேற்கொண்டார்.

சேலம், 

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து வருவாய்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் ராமன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில், மின்திரை மூலம் டெங்கு காய்ச்சல் குறித்தும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டியது குறித்தும் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசியதாவது:- சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை முற்றிலும் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதார துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வட்டாரத்திலும் மருத்துவ அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு காய்ச்சல் கண்காணிப்பு, கொசுப்புழு ஒழிப்பு பணி, புகை மருந்து அடிக்கும் பணி மற்றும் குளோரினேசன் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்பார்வையிடுதல் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சலுக்காக 3 வகையாக தனி படுக்கைகள் கொண்ட வார்டுகள் அமைக்கப்பட்டு காய்ச்சல் கண்டறியப்படும் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. டெங்கு காய்ச்சல் தடுப்பு பாதுகாப்பிற்காக நிலவேம்பு குடிநீர் மருத்துவ முகாம்களிலும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் அனைத்து துறை அலுவலர்களும் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், சேலம் மாநகர சுகாதார அலுவலர் பார்த்திபன், உதவி கலெக்டர்கள் மாறன், துரை, அமிர்தலிங்கம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story