பா.ஜனதா-சிவசேனா கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து 30 தொகுதிகளில் அதிருப்தி வேட்பாளர்கள் போட்டி மராட்டிய தேர்தல் களத்தில் பரபரப்பு


பா.ஜனதா-சிவசேனா கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து 30 தொகுதிகளில் அதிருப்தி வேட்பாளர்கள் போட்டி மராட்டிய தேர்தல் களத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Oct 2019 4:15 AM IST (Updated: 12 Oct 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா - சிவசேனா வேட்பாளர்களை எதிர்த்து அதிருப்தி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலை பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜனதா 164 இடங்களிலும் சிவசேனா 124 இடங்களிலும் போட்டியிடுகிறது.

இதில் பா.ஜனதா, சிவசேனா கட்சியை சேர்ந்த பலர் சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். இதில் நாசிக், கொங்கன், மரத்வாடா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிருப்தி வேட்பாளர்களால் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மும்பையில் வெர்சோவா தொகுதியில் பா.ஜனதா சார்பில் பாரதி லவேக்கர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சிவசேனாவை சேர்ந்த பெண் கவுன்சிலர் ராஜூல் பட்டேல் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதேபோல பாந்திரா கிழக்கில் சிவசேனா சார்பில் மேயர் விஷ்வநாத் மகாதேஷ்வர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சிவசேனாவை சேர்ந்த தற்போதைய எம்.எல்.ஏ. திருப்தி சாவந்த் போட்டியிடுகிறார்.

உத்தவ் தாக்கரேயின் வீடு அமைந்து உள்ள பாந்திரா கிழக்கு தொகுதிலேயே சிவசேனா வேட்பாளரை எதிர்த்து அந்தகட்சியை சேர்ந்த ஒருவர் சுயேச்சையாக போட்டியிடுவது சிவசேனாவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்தேரி கிழக்கு தொகுதியில் சிவசேனாவின் ரமேஷ் லட்கேவை எதிர்த்து பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முர்ஜி பாட்டீல் சுயேச்சையாக களம் காண்கிறார். கல்யாண் மேற்கு தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள பா.ஜனதாவின் நரேந்திரபவார், சிவசேனா வேட்பாளர் விஸ்வநாத் போயருக்கு எதிராக போட்டியிடுகிறார். இதேபோல சிந்துதுா்க் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் மோதுகின்றன.

சாவந்த்வாடியில் சிவசேனாவின் தீபக் கேசர்கரை எதிர்த்து பா.ஜனதாவை சேர்ந்த அதிருப்தியாளர் ராஜன் தெலி போட்டியிடுகிறார். குடல் தொகுதியில் சிவசேனா எம்.எல்.ஏ. வைபவ் நாயக்கிற்கு எதிராக பா.ஜனதாவின் ரஞ்சித் நாயக் போட்டியிடுகிறார். கன்காவ்லியில் நாராயண் ரானே மகன் நிதேஷ் ரானேக்கு எதிராக சிவசேனாவின் சதீஸ் சாவந்த் களத்தில் உள்ளார்.

முதல்-மந்திரியின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்டெக் தொகுதியில் பா.ஜனதாவை சேர்ந்த மல்லகார்ஜூன் ரெட்டியை எதிர்த்து சிவசேனாவின் அதிருப்தி வேட்பாளர் ஆஷிஸ் ஜெய்ஸ்வால் போட்டியிடுகிறார். சட்டமன்ற சபாநாயகர் ஹரிபாவு பாக்டேவுக்கு எதிராக சிவசேனாவை சேர்ந்த ரமேஷ் பவார் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

இதில் நேற்று முன்தினம் பா.ஜனதா 4 போட்டி வேட்பாளர்களை கட்சியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து அதிருப்தி வேட்பாளர்கள் போட்டியிடுவது சட்டசபை தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story