2011முதல் 2016 வரை 5 ஆண்டுகளில் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? ரங்கசாமிக்கு, நாராயணசாமி கேள்வி


2011முதல் 2016 வரை 5 ஆண்டுகளில் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? ரங்கசாமிக்கு, நாராயணசாமி கேள்வி
x
தினத்தந்தி 12 Oct 2019 12:06 AM GMT (Updated: 12 Oct 2019 12:06 AM GMT)

2011 முதல் 2016 வரை 5 ஆண்டுகளில் கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன? என்று எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுச்சேரி,

காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று கிருஷ்ணாநகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகள் எங்களை குறைசொல்வதற்கு எதுவுமில்லை. இந்த தொகுதியில் பல மக்கள் நல திட்டங்களை வைத்திலிங்கம் நிறைவேற்றி உள்ளார். குடிநீர், சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். புதிய சாலைகள், கழிவுநீர் வெளியேற்றுவதில் சில பிரச்சினைகள் உள்ளது. அதை நிவர்த்தி செய்து கொடுப்போம்.

நாங்கள் சட்டம் ஒழுங்கினை காப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது நெல்லித்தோப்பு சிக்னல் அருகே அடகுக்கடை வைத்திருந்தவர் வெட்டிக்கொல்லப்பட்டார். நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர்தான் அந்த கொலை குற்றவாளியை கைது செய்தோம். 5 கிலோ தங்க நகைகளையும் மீட்டு கொடுத்தோம்.

முத்தியால்பேட்டையில் நடந்த கொலையில் தொடர்புடையவர்களையும் பிடித்தோம். தற்போது ரவுடிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2-ம் தர ரவுடிகள் சிலர் வெளியில் உள்ளனர். ரவுடிகள் மீதான நடவடிக்கைகளை கடுமையாக்கி உள்ளோம். ரவுடிகள் ராஜ்யத்தை ஒடுக்குகிறோம். இப்போது மக்கள், வியாபாரிகள் அமைதியாக இருப்பதாக எங்களிடம் தெரிவிக்கிறார்கள்.

ரங்கசாமி ஆட்சியில் இருந்தபோது ரவுடிகள் மாமூல் கேட்டார்கள். நீங்கள் அதை ஒழித்துவிட்டீர்கள் என்று கூறுகிறார்கள். தற்போது ரங்கசாமி ரவுடிகள், குண்டர்களுடன் சென்று வாக்கு கேட்கிறார். அவருக்கு இந்த தொகுதியில் ஆள் இல்லை. அதனால் வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்துள்ளார். அவரது ஆட்சியில் பள்ளி மாணவனை வெட்டி ஏரியில் போட்டார்கள்.

நமது மாநிலம் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இவை எதுவும் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமிக்கு தெரியாது. ஏனென்றால் அவர் சட்டமன்றத்துக்கு வருவதில்லை. இலவச அரிசி வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்கவில்லை. அதை ஏனென்று ரங்கசாமி கேட்கவில்லை. கவர்னருக்கு உறுதுணையாக என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் உள்ளன.

தற்போது புதிதாக கோகுலகிருஷ்ணன் எம்.பி. வந்துள்ளார். அவர் நாங்கள் கடன் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். நாங்கள் ரங்கசாமி காலத்தில் வாங்கிய கடனை அடைத்து வருகிறோம். ரூ.1000 கோடி வட்டியும், முதலுமாக அடைத்துள்ளோம். ரூ.5 ஆயிரம் கோடியாக இருந்த வருமானத்தை ரூ.8 ஆயிரத்து 500 கோடியாக உயர்த்தி உள்ளோம்.

புதுச்சேரியை அமைதியாக வைக்காதவர்தான் ரங்கசாமி. அவர் தனது ஆட்சிக்காலத்தில் என்ன திட்டங்களை கொண்டுவந்தார். பல்கலைக்கழகம், மருத்துவக்கல்லூரி, கல்லூரிகள் என அனைத்தும் வந்தது காங்கிரஸ் ஆட்சியில். 2011 முதல் 2016 வரை அவர் என்ன திட்டத்தை கொண்டு வந்தார்? அவர் எதையும் செய்யாததால்தான் அவரை மக்கள் புறக்கணித்தனர். காமராஜ் நகர் தொகுதி மக்களும் அவரை புறக்கணிப்பார்கள். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story