சாணார்பட்டி அருகே சிறுவர், சிறுமி உள்பட 15 பேருக்கு மர்மகாய்ச்சல்; சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சிகிச்சை


சாணார்பட்டி அருகே சிறுவர், சிறுமி உள்பட 15 பேருக்கு மர்மகாய்ச்சல்; சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சிகிச்சை
x
தினத்தந்தி 12 Oct 2019 6:37 PM IST (Updated: 12 Oct 2019 6:37 PM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி அருகே சிறுவர்-சிறுமி உள்பட 15 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த கிராமத்தில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோபால்பட்டி,

சாணார்பட்டி அருகே அய்யம்பட்டியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அவ்வப்போது வெயிலும் அடிக்கிறது. இந்த மாறுபட்ட கால சூழ்நிலையில் பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றன.

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை 15 பேர் மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் சிகிச்சை தேடி கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், கொசவப்பட்டி வட்டார மருத்துவமனைக்கும் படையெடுக்கின்றனர். அங்கு அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த முகே‌‌ஷ் (வயது 4), சுமதி (13) உள்பட 4 பேருக்கு காய்ச்சல் குறைந்தபாடில்லை. இதனால் அவர்கள்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மர்மகாய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சாணார்பட்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரோஜா, அய்யாபட்டி ஊராட்சி செயலர் கோபாலகிரு‌‌ஷ்ணன், கிராம செவிலியர் ராமாத்தாள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சுகாதார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தெருக்களை சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் தூவுகின்றனர். வீடுகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரில் ‘அபேட்’ மருந்து ஊற்றுகின்றனர்.

இதுகுறித்து கோபால்பட்டி சுகாதார ஆய்வாளர் நல்லேந்திரன் கூறுகையில், காய்ச்சல் பரவுவதை தடுக்க அய்யாபட்டியில் அனைத்து வீடுகளின் தண்ணீர் தொட்டிகளில் ‘அபேட்’ மருந்து ஊற்றப்படுகிறது. பழைய டயர்கள் அப்புறப்படுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அய்யாபட்டி மட்டுமின்றி அருகிலுள்ள வேம்பார்பட்டி கிராமத்திலும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளோம். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார்.

Next Story