பண்ணைக்குட்டை கரையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்; கலெக்டர் வீரராகவராவ் அறிவுரை


பண்ணைக்குட்டை கரையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்; கலெக்டர் வீரராகவராவ் அறிவுரை
x
தினத்தந்தி 12 Oct 2019 7:15 PM IST (Updated: 12 Oct 2019 7:08 PM IST)
t-max-icont-min-icon

பண்ணைக்குட்டையின் கரையில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கூறினார்.

நயினார்கோவில்,

தமிழக அரசு விவசாயிகள் நலனை பாதுகாத்திடும் வகையில் வேளாண்மை துறை மூலம் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மழைநீரை வீணாக்காமல் சேமித்து வறட்சியான காலத்தில் பாசனத்திற்காக பயன்படுத்த ஏதுவாக வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களது சொந்த இடத்தில் பண்ணைக்குட்டை அமைப்பதற்கு ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-ம் நிதியாண்டில் 520 பண்ணைக்குட்டைகளும், 2018-ம் நிதியாண்டில் 476 பண்ணைக்குட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டில் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான மானியத்தில் 2,575 பண்ணைக்குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளிடம் இருந்து இதுவரை மொத்தம் 1,823 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் மொத்தம் 906 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 180 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

இந்த நிலையில் நயினார்கோவில் யூனியன் தவளைக்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பூநாட்சி என்பவர் தனது சொந்த இடத்தில் ரூ.1 லட்சம் மானிய உதவியுடன் அமைத்துள்ள பண்ணைக்குட்டையை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது விவசாயி பூநாட்சி தனக்கு சொந்தமாக 8 ஏக்கர் அளவில் விவசாய நிலம் இருப்பதாகவும், அதில் நெல் சாகுபடி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டத்தின் கீழ் தனக்கு வழங்கியுள்ள ரூ.1 லட்சம் மானியம் உதவியாக இருந்ததாகவும், இதன்மூலம் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டை மூலம் தண்ணீரை சேமித்து நிலத்திற்கு பாசன வசதி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து பண்ணைக்குட்டையை சிறப்பாக அமைத்துள்ள பூநாட்சியை பாராட்டிய கலெக்டர் வீரராகவராவ் பண்ணைக்குட்டையின் கரையில் பனைமரம், வேம்பு, அரசமரம் உள்ளிட்ட பலன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்கவும் அறிவுரை வழங்கினார். பண்ணைக்குட்டைகள் அமைத்துள்ள அனைத்து விவசாயிகளும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். விவசாயிகள் நலனுக்காக செயல் படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தினை ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பாலாஜி, உதவி செயற்பொறியாளர் செல்வகுமார், பரமக்குடி தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, ராஜகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story