மத்திய அரசை கண்டித்து 16-ந்தேதி கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பட்டம்


மத்திய அரசை கண்டித்து 16-ந்தேதி கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:45 PM GMT (Updated: 12 Oct 2019 5:09 PM GMT)

மத்திய அரசைக் கண்டித்து வருகிற 16-ந்தேதி காரைக்காலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளது.

காரைக்கால்,

காரைக்காலில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்த இடதுசாரிகள் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட், வட்டச் செயலாளர் தமீம், இந்திய கம்யூனிஸ்டு காரைக்கால் பிரதேச செயலாளர் மதியழகன் மற்றும் இடதுசாரி கட்சிகளை சேர்ந்த கலியபெருமாள், திவ்யநாதன், வீரராகவன், கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட் கூறியதாவது;-

மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பொருளாதாரத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சியால் நாட்டின் பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அறிவார்ந்த நிலையில் நிர்வகிக்க பா.ஜ.க. அரசால் முடியவில்லை. கடந்த 3 மாதங்களில் மக்களுக்கு எதிரான வகையில் 34 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மத்திய அரசின் தவறான கொள்கையால் நாட்டில் தொழிலாளர் வர்க்கம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை மேம்பாட்டுக்கு உரிய கவனம் செலுத்தவோ, சிறப்புத் திட்டம் வகுக்கவோ மத்திய அரசால் முடியவில்லை. முந்தைய பா.ஜ.க. அரசு காலத்தின் நடவடிக்கையாலும், தற்போதைய ஆட்சியின் அவலத்தாலும் நாட்டில் வறுமை, பட்டினியால் மக்கள் அவதிப்படுகிறார்கள். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை. ஒட்டுமொத்தத்தில் பா.ஜ.க. அரசின் தவறான செயல்பாடுகளால் மக்கள் சொல்லமுடியாத துயரங்களை சந்தித்துவருகிறார்கள்.

இதனை கண்டிக்கும் வகையில், நாடு முழுவதும் வருகிற 16-ந் தேதி (புதன்கிழமை) இடதுசாரிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. காரைக்காலில் கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அன்றைய தினம் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story