10 ஆண்டுகளுக்கு பிறகு கோவை- பொள்ளாச்சி இடையே நிரந்தர ரெயில் சேவை - நாளை மறுநாள் தொடங்குகிறது


10 ஆண்டுகளுக்கு பிறகு கோவை- பொள்ளாச்சி இடையே நிரந்தர ரெயில் சேவை - நாளை மறுநாள் தொடங்குகிறது
x
தினத்தந்தி 12 Oct 2019 10:00 PM GMT (Updated: 12 Oct 2019 5:53 PM GMT)

கோவை-பொள்ளாச்சி இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரந்தர ரெயில் சேவை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

கோவை,

கோவை-பொள்ளாச்சி இடையேயான மீட்டர் கேஜ் பாதையில் ரெயில்கள் இயக்குவது கடந்த 2009-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டன. அந்த பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு நிறைவடைந்தன.

அந்த ஆண்டு ஜூலை 15-ந் தேதி முதல் புதிதாக அமைக்கப்பட்ட அகல ரெயில் பாதையில் கோவை- போத்தனூர்- கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி வரை சிறப்பு ரெயில்கள் காலை மற்றும் மாலையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு ரெயில்களை 6 மாதத்திற்கு ஒரு முறை ரெயில்வே நிர்வாகம் நீட்டித்து வருகிறது.

இந்த நிலையில் அகல ரெயில் பாதையாக மாற்றுவதற்கு முன்பு கோவை- பொள்ளாச்சி -திண்டுக்கல்- மதுரை மார்க்கத்தில் ஓடிக் கொண்டிருந்த அனைத்து ரெயில்களையும் இயக்க வேண்டும் என்று கோவை, பொள்ளாச்சியில் உள்ள ரெயில் பயணிகள் மற்றும் பொது நல அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் புதிய ரெயில்களை இயக்க முன்வரவில்லை.

இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை-பொள்ளாச்சி இடையே அமைக்கப்பட்ட அகல ரெயில் பாதையில் புதிய ரெயில்களை இயக்கத் தயார் என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தென்னக ரெயில்வேக்கு பரிந்துரை கடிதம் எழுதினார்கள்.

அதன் அடிப்படையில், தற்போது கோவை- பொள்ளாச்சி மார்க்கத்தில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்களை நிரந்தர ரெயில்களாக மாற்றி ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கோவையில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு காலை 7.05 மணிக்கு சென்று சேரும் சிறப்பு ரெயில் மற்றும் பொள்ளாச்சியில் இருந்து காலை 7.30-க்கு புறப்பட்டு கோவைக்கு காலை 8.46 மணிக்கு வந்தடையும் சிறப்பு ரெயில் ஆகியவை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் நிரந்தர ரெயிலாக இயக்கப்படும். இந்த ரெயில்கள் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் மட்டும் இயக்கப்படும்.

ஆனால் கோவை- பொள்ளாச்சி இடையே மாலையில் இயக்கப்பட்டு வரும் பாசஞ்சர் ரெயில்கள் தொடர்ந்து சிறப்பு ரெயில்களாக தான் இயக்கப்படும். இதே போல பழனியில் இருந்து தினமும் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு மதியம் 2.15 மணிக்கு வரும் பயணிகள் ரெயிலும், கோவையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு பழனிக்கு மாலை 4.40 மணிக்கு சென்று சேரும் சிறப்பு ரெயிலும் வருகிற 15-ந் தேதி முதல் நிரந்தர ரெயில்களாக இயக்கப்படும்.

இந்த நிரந்தர ரெயில்களை டெல்லியில் இருந்து மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.

மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவையில் இருந்து தினமும் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு பழனிக்கு மாலை 4.40-க்கு செல்லும் ரெயிலை மதுரை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது கோவையில் இருந்து புறப்படும் ரெயில் பழனிக்கு மாலை 4.40 மணிக்கு சென்று சேருகிறது. அங்கிருந்து மற்றொரு ரெயில் மதுரைக்கு மாலை 4.45 மணிக்கு புறப்படுகிறது. எனவே அந்த இணைப்பு ரெயிலை மதுரை செல்லும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரெயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பை தொடர்ந்து கோவை-பொள்ளாச்சி மார்க்கத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரந்தர ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொண்டு பயன் பெறலாம் என்று சமூக ஆர்வலர்கள் உடுமலை சண்முகசுந்தரம், பொள்ளாச்சி ராஜ்சேகர், கிணத்துக்கடவு சிவமோகன், கோவை ஜெயராஜ் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Next Story