நிதி-மனிதவள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் பேச்சு


நிதி-மனிதவள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் பேச்சு
x
தினத்தந்தி 13 Oct 2019 4:30 AM IST (Updated: 13 Oct 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு நிதி-மனிதவள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கருவூல கணக்குத் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் தென்காசி ஜவஹர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தென்காசி ஜவஹர் பேசியதாவது:-

தமிழக அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவிலேயே முதன் முறையாக மாநிலத்தின் நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. இதனை செயல்படுத்துவதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம் மற்றும் வரவு, செலவு குறித்த விவரங்களை குறித்த நேரத்தில் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அரசின் நிதி நிர்வாகத்தை மிக துல்லியமாக நடத்த இயலும். அரசு பணியாளர்களை மிக சிறப்பாக மக்கள் சேவைக்கு பயன்படுத்தலாம். இதனால் 9 லட்சம் அரசு பணியாளர்களும், 8 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவார்கள்.

வெளிப்படைத்தன்மை

இந்த திட்டத்தால் நிதி மற்றும் மனிதவள மேலாண்மையில் வெளிப்படை தன்மையுடன் துரிதசேவையை மக்களுக்கு வழங்கப்படுவதுடன், கருவூலத்தில் சமர்ப்பிக்கப்படும் பட்டியல்களில் ஏற்படும் தவறுகளால், பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதில் ஏற்படும் சிரமங்கள் முழுமையாக தவிர்க்கப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் அனைவரும் தங்கள் பணி பதிவேட்டில் மேற்கொள்ளப்படும் பதிவுகள் குறித்த விவரங்களை தங்கள் செல்போன் வாயிலாக பார்த்து தெரிந்து கொள்ள முடியும். எனவே இத்திட்டத்தினை மாவட்டத்தில் விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அனைத்து அலுவலர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் இயக்குனர் (மின் ஆளுகை) மகாபாரதி, திருச்சி மண்டல இணை இயக்குனர் பழனிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, மாவட்ட கருவூல அலுவலர் முருகவேல், கோட்டாட்சியர் பழனிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story