தீவு பகுதியில் இருந்து தனுஷ்கோடியில் குவிந்துள்ள ஆலா பறவைகள்


தீவு பகுதியில் இருந்து தனுஷ்கோடியில் குவிந்துள்ள ஆலா பறவைகள்
x
தினத்தந்தி 13 Oct 2019 4:15 AM IST (Updated: 13 Oct 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

தீவு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்கு ஆயிரக்கணக்கான ஆலா பறவைகள் இடம்பெயர்ந்துள்ளன.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதிக்கு ஆண்டுதோறும் மழை சீசன் தொடங்கும்போது அக்டோபர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை பிளமிங்கோ, கடல்ஆலா, கடல்புறா உள்ளிட்ட பல வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம். இந்த ஆண்டும் மழை சீசன் தொடங்குவதற்கான சூழ்நிலை தொடங்கி உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவு பகுதிகளில் இருந்து காஸ்பியன் ஆலா பறவைகள் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதிக்கு கடந்த வாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துள்ளன. எம்.ஆர்.சத்திரத்தில் இருந்து பாலத்திற்கு இடைப்பட்ட கடல் பகுதியில் கூட்டமாக நின்றபடி இரை தேடுவதும் ஒன்று சேர்ந்து பறப்பதையும் அங்குவரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஆஸ்திரேலியா, ஆசியா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா போன்ற நாடுகளில் தான் கடல் ஆலாக்கள் அதிகஅளவில் உள்ளன.அது போல் இந்தியாவிலும் கடல்ஆலாக்கள் உள்ளன.10-க்கும் மேற்பட்ட ஆலா பறவைகள் உள்ளன.மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவுகள் மற்றும் அதை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பறவைகள் வாழ்ந்து வருகின்றன.

ஆண்டுதோறும் மழை சீசன் தொடங்கும் அக்டோபர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரையிலும் தனுஷ்கோடி கடல் பகுதிக்கு பிளமிங்கோ, காஸ்பியன்ஆலா உள்ளிட்ட பல வகையான கடல் புறாக்கள், ஏராளமான பறவைகள் இங்கு வருவது வழக்கம். தற்போது மழை சீசன் தொடங்க உள்ளதால் தீவு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து ஆயிரக்கணக்கான காஸ்பியன் ஆலா பறவைகள் தனுஷ்கோடி கடல் பகுதியில் குவிந்துள்ளன. இன்னும் 6 மாத காலத்தில் பல வகையான பறவைகளை தனுஷ்கோடி கடல் பகுதியில் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story