பள்ளி மாணவர்களிடையே கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


பள்ளி மாணவர்களிடையே கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 12 Oct 2019 10:45 PM GMT (Updated: 12 Oct 2019 7:11 PM GMT)

பள்ளி மாணவர்களிடையே கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் தொற்றுநோய் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு அமைக்க வேண்டும். படுக்கைகளில் கொசுவலை பயன்படுத்த வேண்டும். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி பகுதிகளில் மாநகராட்சி துணையுடன் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிக்க வேண்டும்.

சுத்தம் செய்ய வேண்டும்

போலி டாக்டர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் கீழ் கழிவுநீர் தேங்காதவாறு சுத்தம் செய்ய வேண்டும். களப்பணிகளின்போது சேகரிக்கப்படும் டயர்கள், உபயோகமற்ற கொசுப்புழு உற்பத்தியாகும் கலன்களை வாகனம் மூலம் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.

பள்ளி, கல்லூரி வளாகங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். பள்ளி மாணவர்களிடையே கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு தொடர்பு அலுவலரை நியமித்து பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, அம்மைநோய், மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பின் உடனே துணை இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story