கயத்தாறு அருகே ஒரே கிராமத்தில் 6 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் சுகாதார பணிகள் தீவிரம்


கயத்தாறு அருகே ஒரே கிராமத்தில் 6 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் சுகாதார பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 13 Oct 2019 3:00 AM IST (Updated: 13 Oct 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே ஒரே கிராமத்தில் 6 பேர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து ஆத்திகுளம் கிராமத்தில் சுமார் 1,300 வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆத்திகுளத்தைச் சேர்ந்த 6 பேர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து கயத்தாறு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், டாக்டர் திலகவதி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று ஆத்திகுளம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர். நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை கயத்தாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

மேலும் ஆத்திகுளம் கிராமத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அங்குள்ள அனைத்து வாறுகாலையும் துப்புரவு பணியாளர்கள் தூர்வாரி, முழு தூய்மை பணியில் ஈடுபட்டனர். அங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து, குளோரின் பவுடர் கலந்த தண்ணீரை வினியோகம் செய்தனர்.

பின்னர் வீடுதோறும் சென்று, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொண்டனர். கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், பஞ்சாயத்து செயலாளர் அய்யப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story